Sunday, November 17, 2013

பாரத ரத்னா சச்சின் - விஷி ஆனந்த் சாதனையாளர் இல்லையா?

பாரத ரத்னா சச்சின் - விஷி ஆனந்த் சாதனையாளர் இல்லையா? - இட்லிவடையில் பதிப்பிக்கப்பட்டது
 
சச்சின் ஓய்வு பெற்ற நாளே, 40 வயதிலேயே, அவரது கிரிக்கெட் சாதனைக்காக, இந்திய அரசு அவருக்கு நாட்டின் மிக உயரிய சிவில் விருதான பாரத ரத்னாவை வழங்கி கௌரவித்துள்ளது. இது சரி தான், இல்லை, நாட்டுக்காக அவர் ஆற்றிய தொண்டு என்ன, நாட்டுக்கு நல்வகையில் பங்களிக்காத அந்த கிரிக்கெட் சாதனைக்கு பாரத ரத்னாவா என்று கேட்டு, இது சரியில்லை என்று இரு தரப்பு வாதங்களை பார்க்க முடிகிறது. ஒப்புக்குச் சப்பாணியாக, அவருக்கு மட்டும் விருது கொடுத்தால் பிரச்சினை வரக்கூடும் என்று கருதி, (எப்போதோ கொடுத்திருக்க வேண்டிய) CNR ராவ்-க்கும் இப்போது சேர்த்து வழங்கியுள்ளது நல்ல நகைச்சுவை.

நாட்டுக்கு ஏதாவது ஒரு வகையில், கண்கூடாக பலன் தரும் சிலபல சாதனைகளை செய்தவர்களுக்கு மட்டும் தான் விருது என்றால், ஏற்கனவே (சமீப காலகட்டத்தில்) பாரத ரத்னா வழங்கப்பட்டவர்களில் சிலபலர் தேற மாட்டார்கள் என்பதை கவனிக்க வேண்டும். சச்சின் உட்பட இதுவரை 43 நபர்கள் இவ்விருதை பெற்றுள்ளனர். அப்பட்டியலில், 10 தென்னிந்தியர்கள் (அதிலும் முதல் மூவர் 1954-லிலேயே விருது பெற்றவர்கள் என்பதை நினைவு கொள்க!) மட்டுமே இருப்பதில் பெரிய ஆச்சரியம் ஏதும் இல்லை! ’தெற்கு தேய்கிறது, வடக்கு வாழ்கிறது’ என்ற கூற்று இன்று வரை பொருந்துகிறது!

இது போன்ற ஓரவஞ்சனையை காரணம் காட்டியே, பிரபல பாடகி எஸ்.ஜானகி, சென்ற வருடம் பத்மபூஷன் விருதை ஏற்க மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அரசியல் காரணங்களுக்காகவே எம்ஜியாருக்கும், ராஜிவ் காந்திக்கும் பாரத ரத்னா தரப்பட்டது என்ற பேச்சிலும் நியாயமான காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன. நாட்டுக்கு தொண்டு, அதனால் விளைந்த நன்மை ஆகியவை மட்டுமே பாரத ரத்னா விருதுக்கான அளவுகோல்கள் அல்ல. ஒரு மனிதர், ஒரு துறையில் செய்த உயர்ந்த/ஒப்பில்லாத சாதனையை கௌரவப்படுத்தும் விதமாகவும் அது வழங்கப்படுகிறது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.


அத்தகைய நோக்கில், சச்சினுக்கு விருது வழங்கப்பட்டது சரியே என்றாலும், அவரை விட விளையாட்டுத் துறையில் அதிகம் சாதித்த, இந்தியாவின் முதல் செஸ் கிராண்ட் மாஸ்டர், இந்தியாவின் ஒரே செஸ் வைரம், இந்தியாவின் (ஏன் ஆசியாவின்) ஒரே உலக செஸ் சேம்பியன் (5 முறை பட்டம், கடந்த 6 ஆண்டுகளாக undisputed Chess champion of the World) விஸ்வநாதன் ஆனந்துக்கு வழங்காமல், சச்சினுக்கு மட்டும் வழங்கியதற்கு நியாயமான காரணங்கள் எதுவுமில்லை என்பது நிதர்சனம்!

மேலே குறிப்பிட்டதில், World என்று வலியுறுத்தியதில் ஒரு காரணமுள்ளது. உலகில் 8 (ஒப்புக்குச் சப்பாணி நாடுகளை விட்டு விடலாம்) நாடுகள் மட்டுமே விளையாடும் கிரிக்கெட்டில், ஒரு டீம் விளையாட்டில், சச்சின் சாதித்ததைக் காட்டிலும், 120 நாடுகளில் விளையாடப்படும், அன்றிலிருந்து இன்று வரை கடுமையான போட்டி நிலவி வரும், தனிமனித விளையாட்டான செஸ்ஸில் ஆனந்த் சாதித்தது மிக மிக மிக அதிகம் என்பதை அவர் சாதனைகளை உற்று நோக்கினாலே போதும்.

2012-ல் நான் எழுதிய இடுகையிலிருந்து சில விஷயங்களை பகிர்கிறேன்.



”இந்தியாவின் முதல் உலக ஜூனியர் செஸ் சேம்பியன், முதல் கிராண்ட் மாஸ்டர், முதல் ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்றவர், துரித ஆட்டம், காய்களை பார்க்காமல் ஆட்டம், மொத்தப் புள்ளிகள் என்ற 3 பிரிவுகளிலும் உலகப் பிரசத்தி பெற்ற ஏம்பர் செஸ் டோர்னமண்ட் பட்டத்தை தனியொருவராக வென்ற முதல் செஸ் ஆட்டக்காரர் என்று பல முதல்கள் ஆனந்தின் செஸ் வாழ்க்கையில் விரவி இருக்கின்றன. அதோடு, இந்தியாவின் ஒரே உலக செஸ் சேம்பியன், கோரஸ் டோர்னமண்ட் பட்டத்தை 5 முறை வென்ற ஒரே மனிதர், மைன்ஸ் செஸ் பட்டத்தை 7 ஆண்டுகள் தொடர்ச்சியாக வென்ற ஒரே ஆட்டக்காரர் என்று நாம் பிரமிக்கத்தக்க “ஒரே” ஒருவர் ஆனந்த் மட்டுமே. மிக உயரிய விருதாக கருதப்படும் செஸ் ஆஸ்கார் பட்டத்தை ஆனந்த் 6 முறை வென்றுள்ளார்.

இந்தியாவின் இரண்டாம் உயரிய விருதான பத்ம விபூஷனையும் ஆனந்த் பெற்றிருக்கும் நிலையில், ஒரு விளையாட்டு வீரருக்கு பாரத் ரத்னா வழங்க வேண்டுமெனில், அதற்கு ஆனந்த் ஒருவரே மிக்க தகுதி படைத்தவர் என்று தாராளமாக சொல்ல முடியும்.”


மேலும், கடந்த 22 ஆண்டுகளாக ஆனந்த் நிகழ்த்தியுள்ள சாதனைகளால் இந்தியாவில் செஸ் விளையாட்டில் பெரும் ஆர்வம் ஏற்பட்டு, ஒரு செஸ் புரட்சியே நடந்துள்ளது. இப்போது இந்தியாவில் 34 கிராண்ட் மாஸ்டர்களும், 70-க்கும் மேற்பட்ட இண்டர்நேஷனல் மாஸ்டர்களும் உள்ளனர். பணம் அதிகம் புழங்காத செஸ் விளையாட்டில், இத்தகைய மறுமலர்ச்சியை, ஆனந்த் தனியொரு மனிதராக நிகழ்த்திக் காட்டியுள்ளார் என்றால் அது மிகையில்லை. இதை நிகழ்த்தியும், 27 ஆண்டுகளாக, இன்று வரை (44 வயது வரை) இந்தியாவின் தலை சிறந்த ஆட்டக்காரராக விளங்கி வருகிறார்! இவற்றுக்கும் மேல், ஆனந்த் எவ்வகையான சாதனை செய்து, பாரத ரத்னாவுக்கு ஏற்புடையவராக ஆக முடியும் என்று புரியவில்லை.

சௌரவ் கங்குலி, ஆனந்த் வெளிநாட்டில் (ஸ்பெயின்) அதிகம் தங்கி இருப்பதால், அவருக்கு பாரத ரத்னா வழங்க ஒரு தயக்கமிருக்கலாம் என்று கூறியிருப்பதை ஏற்க இயலாது. வெளி நாட்டவரான நெல்சன் மண்டேலாவுக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டிருக்கும்போது, வெளிநாட்டில் தங்கியிருக்கும் “இந்திய” ஆனந்துக்கு வழங்குவதில் என்ன தயக்கம்! ஆனந்த் வட இந்தியராக இருந்திருந்தால், அவரது மகா சாதனைகளுக்கு அவருக்கு இந்நேரம் பாரத ரத்னா வழங்கப்பட்டிருக்கும் என்று தோன்றுகிறது.

சச்சினுக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டதற்கு, கிரிக்கெட் பிரபல விளையாட்டு என்பதனால், என்ற கூற்றை ஓரளவு தான் ஏற்க முடியும். பாரத ரத்னா பீம்சென் ஜோஷி மாமேதை என்பதில் ஐயமே இல்லை. ஆனால், அவரது ஹிந்துஸ்தானி இசையை எத்தனை சாதாரணர்களால் புரிந்து ரசிக்க இயலும். அதனால், பிரபலம் என்பது அளவுகோல் ஆகாது. உண்மை என்னவெனில், ஆனந்த் போல அல்லாமல், சச்சினின் இமேஜ் திறமையாக உருவாக்கப்பட்டு பேணிக் காக்கப்பட்டது. மீடியாவும் அதில் பங்களித்தது.

ஆனந்த், தனது ஒவ்வொரு பெரும் வெற்றிக்குப் பிறகு, மீடியாவில் தோன்றி, அதற்கான அவரது உழைப்பை, சிரமங்களைப் பற்றி பெரிய அளவில் பேசியதில்லை. அதனால், செஸ் விளையாட்டு குறித்து ஓரளவு அறிந்தவர் மட்டுமே, அவரது ஹிமாலய சாதனையின் வீச்சை புரிந்து கொள்ள முடிகிறது. மேலும், சச்சினுக்கு பல மும்பை (சினிமா, அரசியல், தொழில்துறை) பிரபலங்களின் ஆதரவு சதாசர்வ காலமும் இருந்து வருகிறது. தெற்கில் இருக்கும் பிரபலங்களும், இந்திய செஸ் ஃபெடரேஷனும் இது போன்ற ஒரு status-ஐ ஆனந்துக்கு ஏற்படுத்த தவறி விட்டனர். இதனாலேயே, ’சச்சினுக்கு பாரத ரத்னா’ என்பது கடந்த 2 ஆண்டுகளாக கேட்டது போல ஆனந்துக்கு பாரத ரத்னா என்ற கோரஸ்/கோஷம் எந்த மட்டத்திலும் பெரிதாக கேட்காததற்கு இன்னொரு முக்கியக் காரணம்.

காங்கிரஸ் கட்சி ஏற்கனவே சச்சினை ராஜ்யசபா உறுப்பினராக ஆக்கியுள்ளது. இப்போது, சரியான சூழலில், அவருக்கு பாரத ரத்னா வழங்கி அவரை காங்கிரஸ் அனுதாபியாக மாற்றியிருக்கிறது. மெல்ல மெல்ல, அவரை தேர்தல் பிரச்சாரத்துக்கு ஓரளவுக்கு பயன்படுத்திக் கொள்ள ஒரு யுக்தியாக இது இருக்கலாம். நன்றியுணர்ச்சி சச்சினுக்கு மட்டும் இல்லாமல் இருக்குமா?!? இறுதியாக, சச்சினுக்கு பாரத ரத்னா வழங்கக்கூடாது என்பதல்ல வாதம். அவரை விட மகத்தான (விளையாட்டில்) சாதனையாளரான உலக செஸ் சேம்பியன் விஸ்வநாதன் ஆனந்துக்கு வழங்காததில் உள்ள நியாயமின்மையும், அரசியல் சார் ஓரவஞ்சனையும் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.



இந்த இரண்டு கட்டுரைகளை (ஒன்று ஆனந்த் பற்றி, ஒன்று சச்சின் பற்றி) கட்டாயம் வாசிக்கவும்.

Viswanathan Anand is as precious as Sachin Tendulkar -----
http://www.rediff.com/sports/slide-show/slide-show-1-viswanathan-anand-is-as-precious-as-sachin-tendulkar/20131109.htm#5

Master Blaster or Master Laster: A revisionist look at Sachin Tendulkar’s career -----
http://www.livemint.com/Opinion/PKgPHTk5wKn8DZLRpCtCyK/Master-Blaster-or-Master-Laster-A-revisionist-look-at-Sachi.html

- எ.அ.பாலா

1 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

விட்டுப்போனது:

2008 மற்றும் 2010-ல் முறையே விளாடிமிர் க்ராம்னிக், டொபோலோவ் ஆகிய 2 ஜாம்பவன்களுக்கு எதிராக ஆடி அவர் வென்றதைப் போன்ற சாதனைகளை இனி ஒரு இந்தியர் அடுத்த 25 ஆண்டுகள் நிகழ்த்தப்போவதில்லை என்று தாராளமாகக் கூற முடியும். தனது 18 வயதிலேயே பத்மஸ்ரீ பட்டம் பெற்றவர் ஆனந்த் ஒருவரே.

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails